நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையில் ஆடிப் பெருக்கை சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக காவிரி கரைகளில் பொதுமக்கள் கூடுவதைத் தடை செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) ஆடிப் பெருக்கையொட்டி பரமத்திவேலூரை சேர்ந்த புதுமண தம்பதிகள் தடையை மீறி நாமக்கல் - கரூர் மாவட்டங்களை இணைக்கும் காவிரி கரையோர பகுதியான தவுட்டுப்பாளையம் காவிரி கரையில் கூடி புனித நீராடி தங்களது இஷ்ட தெய்வங்களை வழிபட்டனர்.
பின்னர் புதுமணத் தம்பதியினர் மாங்கல்ய பூஜை செய்தும், கன்னிமார்க்கும் காவிரித் தாய்க்கும் நன்றி கூறி சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர். பெண்கள், குழந்தைகள் முளைப்பாரியை காவிரியாற்றில் விட்டு, சுமங்கலிப் பூஜை செய்து தாலியைப் பிரித்துக் கட்டி வழிபாடு நடத்தினர். தடையை மீறி ஏராளமான பொதுமக்கள் கூடியது கரோனா தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.