நாமக்கல்லில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு தினந்தோறும் பூஜை செய்ய 20க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகர்களை அவதூறாகப் பேசியதாகவும், கோயில் விதிமுறைகளை அவர் பின்பற்றவில்லை எனவும் வாட்ஸ்அப்பில் செய்தி பரவியுள்ளது.
இதன் காரணமாக அக்கோயிலில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பூஜை செய்து வரும் வெங்கடேசன் என்ற அர்ச்சகரை ரமேஷ் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அர்ச்சகர் வெங்கடேஷ், நேற்று இரவு தனது வீட்டில் மயக்கமடைந்துள்ளார். பின்னர், நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அர்ச்சகர் வெங்கடேஷ் கூறுகையில், ரமேஷ் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பவில்லை எனவும், ஆனால் செய்யாத தவறுக்கு அவர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்தாண்டு அனுமன் ஜெயந்தி வருகின்ற 25ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இணை ஆணையரும் கோயில் அர்ச்சகரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிவரும் சூழலில், எவ்வாறு அனுமன் ஜெயந்திக்கு தயாராகுவார்கள் என்றும் பக்தர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறை பொறுப்பாளர்கள் பதிவியேற்பு