நாமக்கல் மாவட்டம் பெரியமணலி அடுத்த ஜேடர்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் தெருவைச் சேர்ந்த யுவராஜ்(38) -மீனா (26) தம்பதி. விசைத்தறி தொழில் செய்து வரும் இவர்களுக்கு நித்தியஸ்ரீ (6) என்ற மகள் இருந்தார். கடந்த வாரம் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நித்தியஸ்ரீ நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சையில் முன்னேற்றமில்லாததால், சிறுமியை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதனையடுத்து அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு அங்கு வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
மேலும், உள்ளாட்சித்துறை சார்பில் சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.