நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் எல்லகிராய்பட்டி கிராமத்தில் தமிழ்நாட்டின் முதன்முறையாக ஹீமோகுளோபினோபதி, தலசீமியா மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட நோய்களை கண்டறியும் பரிசோதனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் இன்று (மே 30) துவக்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் ரக மருந்துகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், 'தமிழ்நாட்டில் 30 மலை கிராமங்களில் 9.13 லட்சம் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், இங்கு வாழும் மக்களுக்கு ஹீமோகுளோபினோபதி, தலசீமியா உள்ளிட்ட நோய்கள் மலைக்கிராமங்களில் அதிகமாக கண்டறியப்படுவதாகவும், இந்த நோயை கண்டறிந்து பரிசோதனைகள் செய்து உயர் ரக மருந்துகள் வழங்க 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதாக தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் மலைக்கிராமங்களில் 26,972 பள்ளி மாணவர்களில் பரிசோதனை மேற்கொண்டதில், 2,297 மாணவர்களுக்கு ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஹீமோகுளோபினோபதி பரிசோதனை செய்திடவே இத்திட்டம் தமிழ்நாட்டில் முதன்முறையாக இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும்' அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'விரைவில் 1021 மருத்துவர்களுக்கும், 940 மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றார். 4,200 மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும், அடுத்த நிதியாண்டில் கொல்லிமலையில் டாம்காலின் 2-வது அலகு அமைக்கப்படும்' என்றும் கூறினார்.
'வேலூர் மாவட்டம், அல்லேரி மலைக்கிராமத்திற்கு உட்பட்ட அத்துமரத்துகொள்ளை பகுதியில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் மலைக்கிராமத்தில் ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் அறிக்கை தாக்கல் செய்த பிறகே அந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்பது தெரியவரும்' என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வேலூர் அருகே பாம்பு கடித்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு செல்ல முயன்ற நிலையில், போதிய சாலை வசதி இல்லாததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இந்த நிலையில், அடிப்படை வசதிகளான சாலை வசதி, போதிய மருத்துவ வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்டவைகள் மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்காக அந்தந்த தொகுதிவாரியாக பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகின்றன? என்பன உள்ளிட்ட பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றன. போதிய சாலை வசதி இல்லாததால் உரிய நேரத்தில் பாம்பு தீண்டிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் ஏற்பட்ட தாமதம் அக்குழந்தையின் உயிரைப் பறித்துள்ளது. இதைத்தொடர்ந்து, உடல் முழுவதும் விஷம் பரவியதால், உயிரிழந்த குழந்தையின் உடலை 10 கி.மீ. வரை கைகளில் தூக்கிச் சென்ற அவலம் குறித்து நினைத்து பார்க்கும் நமது அனைவரையும் வேதனையில் ஆழ்த்துகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒடிசாவில் இதே போல நடந்த சம்பவம் இன்று தமிழ்நாட்டிலும் நடந்துள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் இது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து, இந்த சம்பவ தொடர்பாக, பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் மலைக்கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கையில், இத்தனை ஆண்டுகளாக வேலூர் போன்ற மாநகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால், இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தச் சிறு பெண் குழந்தையின் இறப்புக்கு, தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் சரியான சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களுக்கான சாலைகளை உடனே அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர்: வேலூர் அருகே கண்கலங்க வைக்கும் சம்பவம்!