ஊரடங்கு உத்தரவால் தொழில் முடங்கிக் கிடக்கும் நாமக்கல் மாவட்டத்தில், லாரி, டெம்போ, சரக்கு ஆட்டோ என சுமார் 55 ஆயிரம் சரக்கு வாகனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் கடந்த மாதம் 24ஆம் தேதிமுதல் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், பணிமனை பழுதுபார்ப்பவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவிக்கின்றனர்.
கரோனா நெருக்கடி நிலைக்கு நடுவே, மக்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, லாரிகளை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடும் இழப்புகளுக்கு இடையே பணி செய்துகொண்டிருக்கும் இந்நேரத்தில், லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்றுமுதல் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளதோடு, கட்டணத்தை எட்டு விழுக்காடு உயர்த்தியுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் லாரி ஓட்டுநர்கள்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மாநிலம் முழுவதும் சரக்கு போக்குவரத்தில் மட்டும் 7,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளார்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கால் கடும் இழப்பைச் சந்தித்துள்ள இந்தச் சூழலில், சுங்கக் கட்டணம் செலுத்தச் சொல்லி நெருக்கடி தருவது நியாயமற்றது என்றும், இதன் காரணமாக ஏற்கனவே உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை மேலும் உயரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ஆறு மாதங்களுக்கு மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும், இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பு அனைத்துத் தரப்பு வாகன ஓட்டிகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், சரக்கு போக்குவரத்தில் முக்கிய கேந்திரமாக விளங்கும் நாமக்கல் லாரி உரிமையாளர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: மக்களைப் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது சாத்தியமா?