நாமக்கல்: குமாரபாளையத்தில் சுமார் 11 அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுபானக் கடைகளுக்கு அருகிலேயே அரசு அனுமதி பெற்ற மதுபான பார்களும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், அரசு அனுமதி பெற்ற மதுபான கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்றைய முன்தினம் (ஜூன் 9) மாலை 4 மணியளவில் பார் அருகில் சில ஊழியர்கள் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனைக் கண்ட பொது நல ஆர்வலர் கனகராஜ், காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளார். அதனை அறிந்த பார் உரிமையாளர் முருகேசன் காவல் துறைக்குத் தகவல் அளித்த பொது நல ஆர்வலர் கனகராஜை மிரட்டி உள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட கனகராஜ், குமாரபாளையம் - பள்ளி பாளையம் சாலையில் உள்ள கலைமகள் சபா பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, பொது நல ஆர்வலர் கனகராஜ் மற்றும் பார் உரிமையாளர் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஊழியர்கள், பொதுநல ஆர்வலர் கனகராஜுக்குப் போட்டியாக சாலையில் உருண்டு, புரண்டு படுத்து உறங்கி உள்ளனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்சுக்கு நேரம் ஒதுக்குவாரா மத்திய அமைச்சர் அமித்ஷா?
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பொதுநல ஆர்வலர்க்குப் போட்டியாகக் கள்ள மதுபான விற்பனை செய்த ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பொது நல ஆர்வலர் கனகராஜ் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவதைத் தடுக்க முயன்றதால் என்னை இப்படிச் செய்கிறார்கள் என கூறிய அவர், மேலும், நான் அனைவரின் நலனுக்காகத்தான் பாடுபடுகிறேன் என்றும், ஆனால் யாரும் தவறைக் கேள்வி கேட்காமல் தன்னை இவ்வாறு நடத்துவது வேதனை அளிப்பதாகவும் கூறி உள்ளார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல் துறை ஆய்வாளர் தவமணி, ‘முறைகேடாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்’ என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் தங்க கடத்தல்.. குருவிகளை கட்டுப்படுத்துமா அரசு? - வெளியான புள்ளி விவரம்