நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி உள்ளிட்ட சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கரோனோ தொடர்பான வதந்தி, பறவை காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள கோழி பண்ணை தொழிலை எவ்வாறு மீட்டெடுப்பது, முட்டை விற்பனையை அதிகரிப்பது, முட்டை உற்பத்தியை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சம்மேளன தலைவர் சுப்பிரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனோ குறித்த தவறான தகவலால் முட்டை கறிக்கோழி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேங்கி உள்ளது. இதுவரை முட்டை விற்பனை 500 கோடி ரூபாய் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி வாரத்திற்கு 15 கோடி ரூபாயும், முட்டை உற்பத்தியில் தினசரி எட்டு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது" என்றார்.
மேலும், கோழிக்கறி சாப்பிடுவதால் கரோனோ பாதிக்கும் என்பதை நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தரலாம் என்றும், கோழி பண்ணை தொழிலை காக்க பண்ணையாளர்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கு ஓராண்டிற்கு வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் வீழ்ச்சி!