ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரம் மின் சிக்கன வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இப்பேரணியில், தேவையில்லாத இடங்களில் மின் சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும், சூரிய ஒளியை அதிகளவு பயன்படுத்த வேண்டும், ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட மின் சிக்கனம் குறித்த வாசகங்களை எழுப்பியதோடு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
இப்பேரணியானது மோகனூர் சாலை, பரமத்தி சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்று நிறைவாக மீண்டும் கோட்ட பொறியாளர் அலுவலகத்திலேயே முடிவுற்றது. இதில் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மின்வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடம் தனியாரிடம் ஒப்படைப்பு!