திருவள்ளுவரின் உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்தும் விதமாக, பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி நேற்று(ஆக.07)காலை 7 மணிக்குத்தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவுற்றது.
திருக்குறளின் 1330 குறட்பாக்களையும், இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டியக்கலைஞர்கள் ஒவ்வொரு குறளின் பொருளையும், தமிழ் எழுத்துகள் பதித்த ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து, பரதநாட்டிய அசைவுகளின் வாயிலாக வெளிப்படுத்தி நடனமாடினர்.
இசை, கவிதை, உரைநடை, பாட்டு ஆகிய வடிவிலும், திருக்குறளை சுழற்சி முறையில் பயிற்சியாளர்கள் கூற, அதற்கு ஏற்ப முகபாவனை, பரதநாட்டிய முத்திரை அசைவுகளுடன் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் சுழற்சி முறையில் 50 பரதநாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடினர்.
நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் சார்பில் அதன் பதிப்பக ஆசிரியர் தியாகு நாகராஜ் இந்த சாதனையைப் பதிவு செய்தார். மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் பரதநாட்டிய குரு உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பரதநாட்டிய மாணவ, மாணவிகள் மற்றும் இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கிப்பாராட்டிப் பேசினார். இதில், நகராட்சித்தலைவர் செல்வராஜ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா : 9-வது சுற்று முடிவுகள்