நாகப்பட்டினம் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பல வழக்குகள் பதிவாகி வந்தன. இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர், காணாமல் போன இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதனையடுத்து சிசிடிவி பதிவில் இருக்கக்கூடிய நபர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(21), பார்த்திபன்(23) என்பது விசாரணையின் முடிவில் தெரிய வந்தது.
மேலும் இவர்கள் இருவரும் தொடர்ந்து வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், வாகன நிறுத்த இடங்களில் நோட்டமிட்டு அங்கு நிறுத்தப்படக் கூடிய இருசக்கர வாகனங்களைத் திருடி, அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரு குற்றவாளிகளையும் கைது செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 6 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - ஒருவர் கைது