இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பின் இறுதி நாளில் குடும்பத்தார், உறவினர்கள் சூழ, எளியோருக்கு கொடை வழங்கி, ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி எளிமையான முறையில் ரமலான் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.
குறிப்பாக பெருமளவு இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை நடத்தும் உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கரோனா பரவல் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பள்ளி வாசல்களிலும் தொழுகை நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ள நிலையில், இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே தொழுகை நடத்தினார்கள்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால், ரமலான் பண்டிகையை அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, கொண்டாடி இருப்பதாகவும்; கரோனா கோரப்பிடியில் இருந்து உலகம் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும் இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாகை, நாகூர், திட்டச்சேரி, வடகரை, வாவ்வாலடி, ஆழியூர் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 48 பள்ளிவாசல்கள் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று முதல் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை' அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!