கரோனா வைரஸ் தொற்றை பரவுவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நாளை முதல் மூடப்படுகிறது. இதனால், மதுபானத்தை தமிழ்நாட்டு எல்லையில் கள்ளத்தனமாக விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மதுபானங்களை மலிவு விலைக்கு பெற்று தமிழ்நாடு எல்லைப்பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் விற்பதற்காக சொகுசு காரில் மதுபானத்தை கடத்திச் செல்வதாக திருநள்ளாறு தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் காவல் துறையினர் திருநள்ளாறு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்த காவல் துறையினர் முயன்றனர். ஆனால், அந்தக் கார் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. இதனையடுத்து, காரை துரத்திச் சென்று பிடித்து ஆய்வு செய்ததில் காரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஐயப்பனை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மது பாட்டில்களுடன் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச்சென்ற கார் ஓட்டுநரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியில் திரிந்தால் பாஸ்போர்ட் முடக்கம் - விஜய பாஸ்கர்