மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த சந்தை படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் மாரியப்பன் (58). விவசாயியான இவர் குலதெய்வ வழிபாட்டிற்காக கொள்ளிடம் ஆற்றின் நடுவே திட்டுப் பகுதியில் அமைந்துள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். இதற்காக கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது நீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததாலும் ஆழமான பகுதியில் கடக்க முயன்றதாலும் மாரியப்பன் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் நீரில் மூழ்கிய மாரியப்பனை மீட்க முயன்றனர். அப்பகுதி ஆழமாக இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை. இதனையடுத்து, உடனடியாக சீர்காழி தீயணைப்பு மீட்புத்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் படகின் மூலம் மாரியப்பனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குலதெய்வ வழிபாட்டிற்காக ஆற்றை கடக்க முயன்றவர் தண்ணீரின் மூழ்கி மாயமான சம்பவம் சந்தை படுகை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.