ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு, வர்த்தகர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி நகர அதிமுகவைச் சேர்ந்த அவைத்தலைவர் ராமன் என்பவர், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள வாட்ஸ்அப் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, மற்ற மாவட்டங்களில் உள்ள அதிமுக அமைச்சர்கள் ஊரடங்கால் அவதியுறும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வரும் வேளையில் நாகையில், கைத்தறித்துறை அமைச்சர் ஏழை மக்களை கண்டுகொள்வதே இல்லை என குற்றஞ்சாட்டி தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணத்தை அக்கட்சியினர் வழங்கி வருகின்றனர். ஆனால், அதிமுகவினர் எந்தவித நிவாரணத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில்லை. இதனால், அதிமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதுடன் தேர்தலின்போது மக்களை சந்திக்க சென்றால் பெரும் வாக்கு சரிவு ஏற்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.
மேலும், ஆளுங்கட்சி அமைச்சரின் செயல்பாடுகளுக்கு எதிராக நாகையில் அதிமுக அவைத் தலைவர் ஒருவரே குற்றம்சாட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வூகான் ஆகிறதா கோயம்பேடு... தவறு எங்கே நடந்தது?