மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தலைமையிலான குழுக்களை நியமித்துள்ளார். அதன்படி நாகை மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் புரெவி புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், மின் கம்ப சேதங்கள், முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பாதிப்பு நிலவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
முன்னதாக முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு அமைச்சர்கள் உணவு வழங்கினர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.வி.பாரதி, எஸ்.பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியரின் ஒருநாள் விசிட்... ஆடிப்போன மக்கள்...