சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் செராமிக் ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் 18 பேர் இந்தியர்கள், அதில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏழு இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் நால்வர் மோசமான நிலையில் உள்ளதாகவும் இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் சென்று விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்து விசாரித்து விவரங்கனை சேகரித்தனர். பின்னர் விபத்து ஏற்பட்ட ஆலையில் சிக்கியிருந்த இந்தியர்கள் 34 பேரை அதிகாரிகளின் உதவியுடன் மீட்டு ஆலையின் விடுதியில் தங்க வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்குக் கருகி இருப்பதால் அடையாளம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் இந்த விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
உயிரிழந்த மூவரில் ஒருவர் நாகை மாவட்டம், ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்று கூறப்பட்டது. தற்போது ராமகிருஷ்ணன் தீ விபத்தின்போது அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வீடியோ ஒன்று அவரின் உறவினர் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்துள்ளது. இது குறித்து குடும்பத்தினர் தங்கள் மகனின் உண்மை நிலை குறித்த தகவலை அறிந்து, அவரை மீட்டுத்தர வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா என்பது முக்கியமில்லை' - பச்சையாகத் திட்டிய திருநாவுக்கரசர்!