சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் செராமிக் ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் 18 பேர் இந்தியர்கள், அதில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு இந்திய தூதரக அலுவலர்கள் சென்று விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்து விசாரித்து விவரங்கனை சேகரித்துவருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகி இருப்பதால் அடையாளம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த மூவரில் ஒருவர் நாகை மாவட்டம், ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்று கூறப்பட்டது. அதன் பின் அவர் இறக்கவில்லை தீ விபத்தின்போது அந்த தொழிற்சாலையில் இருந்து ராமகிருஷ்ணன் வெளியேறும் வீடியோ ஒன்று அவரின் உறவினர் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகத்தில் விசாரித்தபோது தீ விபத்தின்போது காணாமல் போனவர்கள் பட்டியலில் ராமகிருஷ்ணன் பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்து நடைபெற்று ஐந்து நாட்களுக்கு மேலாகியும், இந்திய தூதரகத்திலும் சரியான விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராமகிருஷ்ணனின் உண்மை நிலை என்ன என்பதை இந்திய தூதரகம் மூலம் அறிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளனர்.