மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வெள்ளபள்ளம் கிராமத்தில் ரூ. 31 கோடி செலவில் கதவணை அமைக்க கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், தடுப்பணை அமைப்பதற்கு 6 மீட்டர் ஆழத்தில் அடித்தளம் அமைக்காமல் இரண்டு மீட்டர் ஆழத்தில் தரமற்ற முறையில் கட்டுமானப் பணிகளைச் செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறியாளர் கேசவன், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட ஆழத்திற்கு அடித்தளம் அமைக்க கூறியுள்ளார். இதை ஒப்பந்ததாரர் ஏற்க மறுத்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் சம்பந்தப்பட்ட பொறியாளர் கேசவனை பொதுப்பணித்துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதையறிந்த விவசாயிகள் நேர்மையான முறையில் பணி செய்த பொறியாளரை மீண்டும் அதே இடத்தில் நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கதவணை அமைப்பதற்கு எவ்வளவு ஆழம் எடுக்கப்பட்டுள்ளது என அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆழம் குறைவாக இருந்ததால் அலுவலர்களிடம் ஆழம் அதிகமாக எடுக்குமாறு உத்தரவிட்டார்.