உலக அளவில் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 30 நாட்களாக இதன் பாதிப்பு தமிழ்நாட்டில் தீவிரமடைந்து இரண்டாம் கட்ட நிலையை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு வங்கிகள், அரசு துறைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்தது.
ஏற்கனவே 144 தடை உத்தரவால் வருமானத்தை இழந்து முடங்கிக் கிடக்கும் மக்கள் தங்களின் அவசர தேவைக்காக பணம் எடுக்க ஏ.டி.எம் சேவை மையங்களை நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அனைத்து வங்கி ஏ.டி.எம் மையங்களிலும் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர்
ஏ.டி.எம் மையங்களில் பணமில்லாத காரணத்தால், வங்கிகளில் குவியும் சூழல் ஏற்பட்டுள்ளது. வங்கிகளுக்கும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சீர்காழி முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதுகின்றனர்.
மேலும், வங்கிகளிலிருந்து பணத்தைப் பெற வரும் பொதுமக்களை வங்கியினுள் விடாமல், தனி நபர் இடைவெளி விட்டு நிற்க வழி செய்யாமல் வங்கிக்கு வெளியே நிற்க வைத்து வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
வங்கி வாசலில் போதிய முகக் கவசம், சமூக இடைவெளி விட்டு நிற்காமல் பணம் எடுக்க வரும் பொதுமக்களை வங்கி நிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.
முன்னதாக, சீர்காழி பகுதியில் ஒருவருக்கு கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சீர்காழியில் விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் காற்றில் பறந்துகொண்டிருப்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.
இதையும் படிங்க : களத்தில் இறங்கும் 90'ஸ் கிட்களின் விளையாட்டுகள்