மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் கேட்டனர்.
இந்த ஏலத்தில் செம்பனார்கோவில், நாங்கூர், காரைமேடு, ஆக்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 425 குவிண்டால் பிபிடி ரக நெல்லினை ஏலத்துக்காக கொண்டுவந்தனர். ஏலத்தின் முடிவில் பிபிடி ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,221-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதைபோல் எள், தேங்காய், கம்பு, மணிலா, கேழ்வரகு, உளுந்து, பாசிப்பயிறு போன்ற விளைபொருட்கள் மறைமுக ஏலத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்றும், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டுவந்து பயனடையுமாறும் விற்பனைக்கூட அலுவலர்கள் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.