நாகப்பட்டினம் மாவட்டம் புதிய நம்பியார் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் தனியார் பள்ளியில் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் டியூஷன் ஃபீஸ் என்று சொல்லக்கூடிய பயிற்சி கட்டணம் மட்டுமே அரசால் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் சீருடைகள் போன்றவைகளுக்கு தனியார் பள்ளிகளில் தனியாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது, இது போன்ற இன்னும் சில மறைமுகக் கட்டணங்களும் வசூல் செய்யப்படுகிறது.
இந்த மறைமுக கட்டணக் கொள்ளையால் இத்தம்பதியினர் மூன்று குழந்தைகளுக்கான கட்டணத்தை பள்ளியில் செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழி, கணினி வழி போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு பாட புத்தகங்கள் சீருடைகள் மட்டுமின்றி பள்ளிக்குச் சென்று பாடம் படிப்பதற்கான மாணவர்களின் தேவையை அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
இதனால், தனியார் பள்ளியில் படித்த தங்கள் மூன்று குழந்தைகளை நாகை காடம்பாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சேர்த்துள்ளதாக தெரிவித்தவர்கள், அரசு பள்ளியில் கல்வி கற்க தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கி தரமான கல்வி கற்பிக்கப்படுவதாகவும், இதனால் அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.