மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகம் வழுவூர் நெய்குப்பையை சேர்ந்த நேரு(33) என்ற விவசாயி தனது டிராக்டரை வீட்டின் அருகே நிறுத்திவைத்திருந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி காணாமல் போனது. இதனையடுத்து இது குறித்து நேரு பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா உத்தரவின் பேரில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு டிராக்டர் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்தச் விசாரணையில் வழுவூர் நெய்குப்பை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டர் எடுத்துச் செல்வதற்கும், அதற்கான டீசல் வாங்க பைக்கில் வந்த வாலிபர்களின் சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் டிராக்டரை திருடிய சிபூலியூரை சேர்ந்த அரவிந்தன்(21), விவேகானந்தன்(25), நதீஷ்(17), மதன்(22), உத்திரங்குடி சக்திவேல்(29), புரசங்காடு அரவிந்த்(18) ஆகிய 6 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து அவர்களை சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: 600 ஆண்டுகால பழமையான மூன்று சிலைகள் மீட்பு - பின்னணி என்ன?