மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி ஆகியவற்றின் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய, இந்த மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் அரசின் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.30) காலை பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. முக்கியமாக சீர்காழியில் 19 மில்லி மீட்டர், செம்பனார்கோவிலில் 15.80 மில்லி மீட்டர் மற்றும் மயிலாடுதுறையில் 8.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
இதன் காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் தண்ணீர் இருப்பதால், தற்காலிகமாக பல்வேறு பகுதிகளில் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி நல்லதுக்குடி, கோடங்குடி, ஆனந்ததாண்டவபுரம் மற்றும் சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் சம்பா சாகுபடி தொடங்கும் காலத்தில் மழை பெய்ததால், விளைச்சல் பாதித்து தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பக்கிங்காம் கால்வாய் புனரமைப்பு தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை