நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டை கிராமத்தில் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் சாமுவேல் என்ற நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை, யோகா போன்ற பல்வேறு போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், கோவா மாநிலத்தில் யூத் அன்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்ற நேஷனல் பெடரேஷன் கப் 2023-க்கான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாட்டிற்காக கலந்து கொண்டு விளையாடினார், மாணவர் சாமுவேல்.
இறுதிப்போட்டியில் தெலங்கானா மாநில வீரருடன் மோதி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய மாணவருக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நரிக்குறவர் சமுதாய மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பள்ளி நிர்வாகி விஜயசுந்தரம் தலைமையில் ரயில் நிலையம் வந்த அம்மக்கள், வெற்றி பெற்ற மாணவர், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு சால்வை அணிவித்தும், மாணவருக்கு பாசி, ஊசி மணி மாலை அணிவித்து வாழ்த்தி, பாராட்டும் தெரிவித்தனர்.
இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி பேசுகையில், “தங்கள் பள்ளியிலிருந்து ராஜந்தோட்டத்தில் உள்ள சாய் விளையாட்டு மைதானத்திற்குச் சென்று பயிற்சி பெறுகிறோம். அப்பகுதி தொலைவில் இருப்பதால், தினமும் அங்கு சென்று பயிற்சி பெறுவதற்கு சிரமமாக இருக்கிறது.
தங்கள் பள்ளியிலேயே விளையாட்டு மைதானம் அமைத்துத் தந்தால் விளையாட்டுத் துறையில் இன்னும் பல சாதனைகளைப் மாணவர்கள் படைப்பார்கள்” என்றார். மேலும், பல்வேறு போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கம் வென்று வரும் மாணவருக்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் கோயில் குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியல்!