தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அமைந்துள்ள திருவள்ளுவர் நகரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் இருக்கும் 12 நுழைவு வாயில்களைச் சுகாதாரத் துறையினர் அடைத்து சீல்வைத்தனர். அப்பகுதியில் வசிக்கும் நபர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை நகராட்சி நிர்வாகம் வழங்கிவருகிறது.
மேலும், வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் அப்பகுதியைத் சுற்றியுள்ள மருத்துவமனை சாலை, அவையாம்பாள்புரம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வங்கிகளை மறுஉத்தரவு வரும்வரை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன்பேரில் பாரத ஸ்டேட் வங்கி, உஜ்ஜீவன் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, யூனியன் வங்கி ஆகிய நான்கும் மூடப்பட்டன. வங்கியின் வாயிலில் இதற்கான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், இவ்வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் பார்க்க: கரோனா அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த இளம்பெண் உயிரிழப்பு!