நாகை மாவட்டம் எரவாஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் , கடந்த 36 ஆண்டுகளாக ஓமன் நாட்டில் தொழில் தொடங்கி தன் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். அவர் மட்டுமன்றி எரவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் ராஜேந்திரன் பணிபுரியும் தொழில் நிறுவனத்தில் வேலைசெய்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து எரவாஞ்சேரி கிரமத்தில் வீடு கட்டியுள்ளனர். குறிப்பாக, ராஜேந்திரன் ஒமன் மன்னன் மீது வைத்துள்ள பற்றின் காரணமாக தனது வீட்டையும் வாசல் முகப்பையும் ஓமன் மன்னரின் வீட்டைப் போன்றே வடிவமைத்துக் கட்டியுள்ளார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ராஜேந்திரன் எரவாஞ்சேரிக்கு வந்துள்ள நேரத்தில், கடந்த 10ஆம் தேதி ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சயித் உடல் நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து, ராஜேந்திரன் வீட்டு வாசல் முன்பு திரண்ட ராஜேந்திரன் கிராம மக்கள் ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சயித் உருவப்படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "ஓமன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டைச் சேர்ந்தவர்களையும் சாதி, மத பாகுபாடின்றி ஓமன் மன்னர் சரிசமமாக நடத்தினார். அங்கு ஆண்களுக்கு நிகராக பெண்களையும் முன்னேற்றப் பாதையில் மன்னர் அழைத்துச் சென்றார். ஓமன் மன்னரின் மறைவு ஓமன் நாட்டு மக்களுக்கும் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பேரிழப்பு" என்றனர்.
இதையும் படிங்க: பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமாவளவன்