நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு தனியார் கிளினிக் நடத்திவரும் மருத்துவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், இவரிடம் சிகிச்சைப் பெற வந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சம் அப்பகுதி பொது மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கூறுகையில்,"கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட 51 நபர்களின் விபரம் சேகரித்து வருகிறோம். மூன்றாம் கட்ட பரவலைத் தடுக்க, மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றவர்கள் உடனடியாக நாகை அரசு மருத்துவர் திருமுருகன் 9751425002, மருத்துவர் ராகவன் 9500493022 ஆகியோரது தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொண்டு தங்களின் தகவலை தெரிவித்து, பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வாழும் 60 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 600 மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாகப்பட்டினத்தில் இதுவரை 24 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
வெளிநாடு, வெளிமாநிலம் சென்று தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3,664 நபர்களில், 2,015 பேர் விடுவிக்கப்பட்டு மீதமுள்ள 1, 368 பேர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்!