சென்னையில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே செல்வதால் நாகை மாவட்டத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
அதன்படி நாகை மாவட்டம் முழுவதுமுள்ள 11 மாநில, மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகள் காவல் துறையின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சென்னையிலிருந்து நாகை மாவட்டத்திற்கு வந்த 83 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாகை அரசு தலைமை மருத்துவமனையில் 41 நபர்களும், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அவரவர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்க மேலவாஞ்சூர் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலிருந்து வரும் சரக்கு லாரிகள், வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெறுகிறது.
லாரி, லோடு வாகனங்களில் கூடுதல் நபர்கள் வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க உயர் கோபுரங்கள் அமைத்து காவலர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ’பயப்படாதீங்க உங்க வண்டிய பிடுங்க மாட்டோம்’ - காவல் துறை மடக்கிப் பிடித்ததால் பதறிய வாகன ஓட்டிகள்