மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில், துறையின் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, கரோனா தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் கணக்கெடுப்பு, விடுதிகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளரிடம் பேசிய சிவசங்கர், "மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்பதை உறுதிசெய்வதற்கு மாணவர்கள் தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்ற பட்டியல் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வித் தரத்தைக் கண்காணிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
மேலும், மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ள பல்வேறு போட்டிகளில், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் அனைவரையும் பங்கேற்கவைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதாரத்தை மேம்படுத்தப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்குக் கூடுதலாகக் கடனுதவி வழங்கப்படும்.
கூடுதல் விடுதிகள் கட்ட உத்தரவு
கிராமப்புற பெண்களின் கல்வித்தரம் மேம்பட அனைவருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதி கட்டடங்கள் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விடுதிகள் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரிகளுக்குக் கூடுதல் விடுதிகள் கட்டுவதற்காக ஆய்வுசெய்யப்படுகிறது. அதனடிப்படையில், தேவைக்கேற்ப வரும் நிதியாண்டில் கூடுதல் விடுதி வசதி ஏற்படுத்தப்படும்" என்றார்.
இக்கூட்டத்தில், காமராஜ் ஐஏஎஸ், மதிவாணன் ஐஏஎஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நகைச்சுவை பதிவுக்குச் சிறையா? 'மாஜிஸ்திரேட்டின் நியாயமான நடவடிக்கை'க்குப் பாராட்டு!