மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மன்னம்பந்தல் ஊராட்சியின் தலைவர் பிரியா பெரியசாமி, கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, துணைத் தலைவர் அமலா தன்னை சாதி ரீதியாக அவமானப்படுத்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மயிலாடுதுறை காவல்துறையினர், துணைத் தலைவர் அமலா மீது சாதிய வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று(நவ.18) மன்னம்பந்தல் ஊராட்சிமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சியில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். அதில், 11 உறுப்பினர்கள் துணைத்தலைவர் தலைமையில் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளி நடப்பு செய்தனர்.
இதுகுறித்து துணைத் தலைவர் அமலா கூறுகையில், 'நான் அளித்த ஊழல் புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் என் மீது அளித்த பொய் புகாருக்கு மட்டும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு செல்வதில்லை என்று உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர்' என தெரிவித்தார்.