மயிலாடுதுறை: நீடூர் என்ற கிராமத்திலிருந்து குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப்பாதைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார்களின் ஆக்கிரமிப்புகள் காரணமாக தூர்ந்து போய் காணப்பட்டு வந்தது.
இதனால் இந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து குளங்களும் நீரின்றி வறண்டு, இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 20 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 150 அடிக்கும் கீழே சென்றுவிட்டதாக இப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இளைஞர்களின் முன்னெடுப்பு
இச்சூழலில், இப்பகுதியின் முக்கிய நீராதார குளமான மணற்கேணி குளத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி நீர் வந்ததை கிராமப் பெரியவர்கள் மூலம் அறிந்த இளைஞர்கள், அந்த நீர்வழித்தடத்தை கிராமப் பதிவேடுகள் மூலமும், கூகுள் மேப் போன்ற தொழில்நுட்பங்கள் மூலமும் கண்டறிந்து அதனை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினர்.
அவ்வகையில், இப்பகுதியைச் சேர்ந்த உபயதுல்லா என்பவரின் முயற்சியில் உள்ளூர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அளித்த நிதியைக் கொண்டு, ஏனாதிமங்கலம் சட்ரஸில் இருந்து நீடூரின் முக்கிய நீராதார குளமான மணற்கேணிவரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு ஜேசிபி இயந்திரம் கொண்டு தூர்வாரி சுத்தப்படுத்தியுள்ளனர்.
அரசு முன்னெடுக்க வேண்டும்
இதனால், இனிவரும் காலங்களில் காவிரி ஆற்றில் நீர் திறக்கப்படும்போது தங்கள் கிராமத்திற்கும் ஆற்றுநீர் பாயும் என்ற உற்சாகத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளனர்.
மேலும், நீடூரில் உள்ள அனைத்து குளங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்றால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் அகற்றப்படாத பிற பகுதிகளிலும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றும், இந்த ஆண்டு இளைஞர்கள் இணைந்து மேற்கொண்ட இப்பணியை அடுத்த ஆண்டு முதல் அரசே மேற்கொண்டு தங்கள் நீராதாரத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 60 ஆண்டுகால வாழ்வு: மனைவி இறந்த அதே நாளில் உயிரைவிட்ட கணவர்