மயிலாடுதுறை: 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மாவட்டத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு ஒரு நாளைக்கு 800 சிப்பம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டு, 250 முதல் 500 சிப்பம் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து விற்பனை செய்வதற்காக 10 நாள்களாகக் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (ஆக.12) இரவு திடீரெனப் பெய்த மழையால் மணல்மேடு, கடக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின.
இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளைக் காக்க வைக்காமல் உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : திருச்சி குடோனில் 550 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது