கடலூர் மாவட்டம், கூத்தாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாபா ரகுராம்(38). இவர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியாக வேலைப்பார்த்து வருகிறார். மருத்துவமனையில் இன்று பணியில் இருந்தபோது, அவரிடம் தோல் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று நோயாளி ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு, "தோல் வியாதிக்கு என்று தனி மருத்துவர் கிடையாது. பொது மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும்" என்று செவிலி கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆண் செவிலி பாபா ரகுராமை, அந்த நபர் பலமாக தாக்கியுள்ளார். காயமடைந்த பாபா ரகுராம் மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், செவிலியை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் செவிலியர்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.