மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ரூ.7, 10, 20 மற்றும் 40 ஆகிய விலைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களிலும், 20 லிட்டர் வாட்டர் கேன்களிலும் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மளிகைக் கடையில் வாங்கிய 20 லிட்டர் வாட்டர் கேனில் உயிருடன் தவளை இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், இது குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் நேரில் வந்து பார்வையிட்டுள்ளார். வாட்டர் கேன் மூடி பிரிக்கப்பட்டதால் குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலையில், குடிநீர் கேன் வாங்கப்பட்ட மளிகைக் கடையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், வாட்டர் கேனில் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் உள்ள வாட்டர் கேனை விற்பனை செய்யக்கூடாது என மளிகை கடைக்காரரை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது, அங்கு மினி லாரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வாட்டர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தவளை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தண்ணீர் நிரப்பப்படாத வாட்டர் கேன்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் தவளை நுழைந்து இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இதனால், அதிகாரிகள் அலுவலர் கட்டடத்தை ஆய்வு செய்த நிலையில், அங்கு காலி கேன்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் தவளைகள், நத்தை, மரவட்டை இருந்துள்ளன.
இதனையடுத்து, குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு பதில் அளிக்க, நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உற்பத்தி செய்யப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வரும் பொருட்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யக்கூடாது என்றும், காலாவதியாகும் தேதியைப் பார்த்து நுகர்வோர்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழு நேரில் ஆய்வு!