மயிலாடுதுறை: திமுக ஆட்சியில் தெய்வங்கள், ஆன்மீகவாதிகள், இறையன்பர்கள், மடாதிபதிகள், சன்னிதானங்கள் என அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்ற “ஆன்மிக ஆட்சியாக” உள்ளது என சீர்காழியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் குடமுழுக்கு திருப்பணியின் போது கிடைக்கப்பட்ட தேவார செப்பேடுகள், ஐம்பொன் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பார்வையிட்டு அவற்றின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு தான் 918 திருக்கோயில்கள் குடமுழுக்கு கண்டுள்ளது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் 400 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தீதாஞ்சேரி திருக்கோவில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு கண்டுள்ளது. இதுபோன்று 918 கோவில்களில் நூறு ஆண்டுகள் கடந்த 30க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்கு கண்ட வரலாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆன்மீக ஆட்சியில் நடைபெற்று வறுகிறது.
அதேபோல் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 27 திருக்கோயில்களில் 23 கோயில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. சட்டநாதர் திருக்கோயில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம்தான் குடமுழுக்கு நடைபெற்றது ஆகவே ஆண்டாண்டு காலமாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள் எல்லாம் குடமுழுக்கு விரைவு படுத்தப்பட்டு போர்க்கால அடிப்படையில் தெய்வங்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆட்சியாக மு.க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நடந்து வருகிறது.
சட்டநாதர் கோயிலை பொறுத்த வரைக்கும் திருக்கோயில் குடமுழுக்கு பணிக்காக கடந்த ஏப்ரல் மாதம் பள்ளம் தோண்டியபோது பல அரிய செப்பேடுகளும், உலோக திருமணிகளும், பூஜை பொருட்களும் கிடைத்துள்ளன. இதுவரை தேவாரம் ஓலைச்சுவடி மற்றும் நூல்களில் தான் கிடைத்துள்ளது முதன் முதலில் செப்பேடுகள் கிடைத்துள்ள வரலாறு முதல் முறை தமிழகத்தில் கிடைத்துள்ளது. இதில் 110 செப்பேடுகள் முழுமையாகவும் 83 செப்பேடுகள் சிதிலம் அடைந்தும் 23 திருமணிகள் முழு அளவில் 13 பூஜை பொருட்களும் கிடைத்திருக்கின்றன இவை பாதுகாப்பாக கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது.
செப்பேடுகளில் மொழிபெயர்க்க வேண்டிய அரிய வகை பாடல்கள் இருப்பதால் அதனை தொல்லியல் துறையுடன் கலந்து ஆலோசனை செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முதலமைச்சர் அவர்கள் நல்ல முடிவினை எடுப்பார்கள். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி ஒரு ஆன்மீக புரட்சிக்கு வித்திடுகின்ற ஆட்சியாக உள்ளது ஆன்மீகவாதிகள், இறையன்பர்கள், மடாதிபதிகள், சன்னிதானங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"கார்ல்சனின் திட்டம் இன்று தெரிய வரும்"- பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் சிறப்பு பேட்டி!