தமிழ்நாட்டில் நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாசியம், டி.ஏ.பி, கூட்டு உரங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து அவற்றை வேளாண் துறை மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கிறது.
கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படும் உரங்களானது 'ஆதார்' அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. வேளாண் துறையானது உரங்கள் இருப்பு விற்பனையை 'ஆன்லைன்' மூலம் கண்காணித்து வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்றுவதோடு, இயற்கையும் விவசாயிகளுக்கு சாதகமாகி, மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு, சரியான விதத்தில் மழை போன்ற காரணங்களால் விவசாய பணிகள் குறித்த நேரத்தில் தொடங்கி நடைபெற்றுவது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"காலத்தே பயிர் செய்" என்பதற்கேற்ப விவசாயிகள், விவசாயப் பணியை தொடங்கினாலும் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றங்கால் நடவு முறையில் சம்பா சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள், பயிர்கள் பசுமை பெறுவதற்கும், வளர்ச்சி அடைவதற்கும், நைட்ரஜன் தேவை என்பதால் அடி உரமாக இடுவதற்கு யூரியா பயன்படுத்தி வருகின்றனர்.
செழித்து வளர வேண்டுமென்றால் அதற்கான முறையான உரங்கள் இடுதல், பூச்சி தாக்குதலை தடுக்க பூச்சி மருந்துகள் உள்ளிட்டவற்றை சரியான இடைவெளியில் தெளிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் லாபம் ஈட்டும் அளவிற்கு மகசூலை பெறமுடியும்.
இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உரங்களானது வேளாண் விற்பனை நிலையங்களில் தேவைக்கு ஏற்ப கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அரசு வேளாண் விற்பனை நிலையங்கள் மூலம் வழங்கும் பூச்சி கொல்லிகள், மருந்துகள் ஆகியவை தரம் இல்லாமல் இருக்கிறது.
இதனால் வெளிச்சந்தையில், தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையாக தெரிவிக்கின்றனர். வேளாண் துறை மூலம் வழங்கப்படும் உரமானது வேளாண் கூட்டுறவு சொசைட்டிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே, அந்த நடைமுறையை மாற்றி அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத காரணத்தால், தனியார் கடை உரிமையாளர்கள் சூழலை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு உரத்தின் விலையை உயர்த்துகின்றனர்.
இதனால் "உழுதவன் கணக்குப் பார்த்தால்; உழக்கு கூட மிஞ்சாது" என்ற நிலையில் சிறு குறு விவசாயிகள் செய்வதறியாது திகைத்து இருகின்றனர். சம்பா சாகுபடியானது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேளாண் கூட்டுறவு சொசைட்டியானது விவசாயிகளுக்கான விவசாயக் கடனை இதுநாள்வரை வழங்கவில்லை.
எனவே விவசாயிகளுக்கான விவசாயக் கடனை அனைத்து வேளாண் கூட்டுறவு சொசைட்டிகளிலும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இது குறித்து வேளாண் துறை இணை இயக்குனர் கல்யாண சுந்தரம் கூறுகையில், "நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா சாகுபடியின் இலக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 900 ஹெக்டர். இதுவரை நேரடி விதைப்பு மூலம் 56 ஆயிரம் ஹெக்டரும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 33 ஆயிரத்து 695 ஹெக்டரும், பாரம்பரிய நடவு படி 8 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 97 ஆயிரத்து 743 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள 36 ஆயிரம் ஹெக்டர் சாகுபடி அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவடையும். குறிப்பாக இந்த ஆண்டு உரத்தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கிணங்க வேளாண் இயக்குனர் தேவையான உரங்களை தொடர்ந்து கொடுத்து வருவதாகவும், அக்டோபர் மாதத்திற்கு தேவையான 13 ஆயிரம் டன் யூரியாவில் ஐந்தாயிரம் டன் அரசிடம் இருந்து பெறப்பட்டு, இதர உர தேவைகளான 26 ஆயிரம் டன் உரத்தில், 12,000 டன் கையிருப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா, பொட்டாஷ் காம்ப்ளக்ஸ் என அனைத்து உரங்களும் தலா 20 டன் இருப்பு வைத்துக் கொள்ள உத்தரவிட்டதோடு, இருப்பு இருப்பதை கண்காணித்து, உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களை வேளாண் வட்டார மேற்பார்வை மூலம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு உரங்களை அதிக விலைக்கு விற்பனை ஆகாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்ற சூழல் ஏற்படும்போது மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்துகளே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தப் பருவத்திற்கான 180 டன் விதை கையிருப்பு உள்ளதாகவும், உரம், பூச்சி மருந்து, விதை விவசாயிகளுக்கு தேவையான அளவு கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் வேளாண் துறை சார்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் அதிக அளவு வயல்களில் நீரைத் தேக்கி வைக்காமல், தழைச் சத்தை அதிகரிக்கும் யூரியாவையும் அதிக அளவு பயன்படுத்தாமல் தழைச்சத்துடன் பொட்டாஷ் கலந்து பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நவீன முறையில் விவசாயம் செய்து வரும் தற்போதைய விவசாயிகள், பாரம்பரிய விவசாய முறைகளை மறந்து விட்டனர் என்று சொல்லும் அளவிற்கு சூழல் உருவாகிவிட்டது. உரம் தட்டுப்பாடு ஏற்படுகிற இந்த சூழலை இயற்கை உரம் கொண்டு சமாளிக்கும் பாரம்பரிய சாகுபடி முறையான இயற்கை விவசாயத்தை பின்பற்றினால் குறைந்த செலவில் அதிக மகசூலை பெற முடியும்” என்றார்.
எனவே, ’இயற்கையோடு இணைவோம் விவசாயத்தை காப்போம்’!
இதையும் படிங்க: சம்பா பருவ கொள்முதல் தொடங்கியது!