மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் விவசாயிகள் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது அதன் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 62 திறந்தவெளி கொள்முதல் நிலையங்களும், 122 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
சுமார் 80 சதவீதம் அறுவடைப் பணிகள் முடிவடைந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர், வில்லியநல்லூர், நல்லத்துக்குடி, கோடங்குடி, இளந்தோப்பு உள்ளிட்ட அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் சுமார் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 மூட்டைகள் என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.
பருவ மழைக் காலம் தொடங்க உள்ளதால் விவசாயிகள் துரிதமாக அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, வரும் வாரங்களில் அரசு கொள்முதல் நிலையத்திற்கு வரும் நெல் மூட்டைகளின் அளவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாத நிலையில், புதிதாக வரும் நெல் மூட்டைகள் அனைத்தும் திறந்தவெளியில் அடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தால் எடை குறைந்து நெல் கொள்முதல் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பதாலும் உடனடியாக நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க:கொடைக்கானல் ஒப்பந்ததாரர் ஏமாற்றி விட்டார் - நடிகர் பாபி சிம்ஹா குமுறல்..!