மயிலாடுதுறை: மாவட்டத்தில் கடந்த மாதம் 11 ஆம் தேதி பெய்த அதீத கனமழையின் காரணமாக சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதம் அடைந்தன. இதையடுத்து மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க, பல்வேறு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து கூலித் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5,000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், விஜயா திரையரங்கம் பகுதியில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், பேரணியாக புறப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். அவர்களை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து விடாதவாறு பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில், அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ’ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும்’ என்று அறிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் டிஎஸ்பி வசந்த ராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து மழையால் பாதிப்படைந்த சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு 5 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.
மழைபாதிப்பு குறித்து முறையிட அலுவலர்கள் விவசாயிகளை மதிக்காது அலட்சியப்படுத்துவது வேதனை அளிக்கிறது, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்க வந்தால் மாவட்ட ஆட்சியர் அமைச்சர் தலைமையிலான கூட்டத்திற்காக தஞ்சாவூர் சென்றுவிட்டதாக கூறுகின்றனர்.
அமைச்சரிடம் பேசினால் ஆட்சியர் உங்களை சந்தித்துவிட்டு கூட்டத்திற்கு வருவார் என்கின்றார். அலுவலர்கள் விவசாயிகளை அலட்சியப்படுத்துவது வேதனை அளிக்கிறது. தனியார் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரில் வங்கியில் கடனை வாங்கி வைத்துள்ளனர்.
விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்பிற்கும் உரிய பணம் கொடுக்காமல் வயிற்றில் அடிக்கின்றனர். மூடப்பட்டுள்ள தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்பு பணிகளை உடன் தொடங்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயரமாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் - அதிருப்தியில் பொதுமக்கள்