மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் அவர் கேட்டறிந்தார். தலைச்சங்காடு, தர்மகுளம், நெப்பத்தூர் மணிகிராமம், திருவாலி, வேட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வடியாத நிலையில் இளம் சம்பா நாற்றுகள் அனைத்தும் அழிந்து விட்டன. ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகா பகுதிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்தது ஏற்புடையது அல்ல.
மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுகாவை சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு காலக்கெடுவை நீட்டிப்பதுடன் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தபடி இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை தமிழ்நாடு அரசே செலுத்த வேண்டும். மழை வெள்ளம் சூழப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சந்தோஷமாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவிக்கிறார்.
அவர்கள் மெயின் ரோட்டை விட்டு கிராமப்புறங்களுக்கு இறங்கி வந்து பார்த்தால் மக்கள் படும் துன்பங்கள் தெரியும். மின்சாரம் இல்லாத கிராமங்களில் மெழுகுவர்த்தி வாங்க கூட காசு இன்றி பொதுமக்கள் உள்ளனர். அதிமுக ஆட்சியில் வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு முகாம்களில் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒருவேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டது. நேற்றுடன் நிவாரண முகாம்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மூடிவிட்டது.
தரமற்ற தளவாடப் பொருட்கள் காரணமாக மின்விநியோகம் செய்ய முடியவில்லை. தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஆறுகளில் சேர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் காரணமாக தண்ணீர் வடிவதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாய தாமரைகளை அகற்றுவதற்கு மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள் நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். ஆனால் அதற்கு நிதி ஒதுக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக குளிக்க தடை நீடிப்பு