நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூரில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
கல்லூரியின் அடிப்படை கட்டமைப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முழுமையாக மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துள்ளது.
மேலும், அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் முழுமையாக இருக்கிறது. தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக இருப்பதால் கடந்த ஓராண்டில் 17 விழுக்காடு சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ், நாகப்பட்டினத்தில் ரூபாய் 336 கோடி மதிப்பீட்டில் பசுமை துறைமுகம் அமைக்கப்படும் என தெரிவித்தது இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ’இதுகுறித்து முறையாக ஆய்வு செய்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறினார்.
இதில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை மக்களவை உறுப்பினர் செல்வராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாகை.மாலி, ஆளூர் ஷாநவாஸ் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 'நீங்க வராதீங்க; நாங்க வர்றோம்' - நரிக்குறவ மக்களுக்கான நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் பேச்சு!