மயிலாடுதுறை: மழை வெள்ளப் பாதிப்புகளை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (நவ.16) பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், 'தமிழகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்க்கச் சென்ற இடங்களில் எல்லாம் அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று பொதுமக்கள் கண்ணீர் மல்க வேதனையை தெரிவித்தனர்.
உண்மையில் மு.க.ஸ்டாலின் தான் மகிழ்ச்சியாக உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சீர்காழி தாலுகாவில் திருவெண்காடு பகுதிக்கு வந்த முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றுவிட்டதாக என்னிடம் மக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்.
கடந்த 2021 ஜன.16ஆம் தேதி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவாரா? என்று அறிக்கை வெளியிட்டார் அதனை சுட்டிக்காட்டி அப்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின் தற்போது முதலமைச்சராக உள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவாரா?
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. கடலூர் மாவட்டம், பூவாளி குப்பத்தில் தமிழக அரசு முடக்கியதால் தற்போது பெய்த கனமழையில் 2000 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. அடுத்த மழைக்குள்ளாவது, அந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இதேபோல், பெருமாள் ஏரி தூர்வாரும் திட்டத்தையும் அரசு முடக்கி வைத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி சீர்காழி தாலுகாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம் தாலுக்கா மக்களுக்கும் சேர்த்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 நிவாரணமாக வழங்க வேண்டும். 10 நாட்களாக வேலை இல்லாததால் தினக்கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
திருவாலி ஏரி உட்பட கடைமடை பகுதியில் உள்ள அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரி மழைநீரை வடிய வைக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகளை கொண்டு முறையாக கணக்கெடுத்து நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும்' என்றார்.
இதனையடுத்து வரும் 2024 தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு, அதிமுக மெகா கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு இடம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படங்க: 'மைசூரிலிருந்து 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ்நாடு வந்துள்ளது'