நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடுவங்குடியில் 18.5 கிலோமீட்டர் வெட்டு வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த வாய்க்கால் மூலம் பட்டவர்த்தி, கடக்கம், இளந்தோப்பு ஆகிய கிராமங்களில் உள்ள 1,915 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன.
செடி, கொடிகள் முளைத்துக்கிடந்த இந்த வாய்க்கால்கள் 2020 - 21ஆம் ஆண்டு தூர்வாரும் திட்டத்தின் கீழ், காவிரி நீர் கடைமடை வந்து சேர்வதற்கு முன்னரே பணிகளை முடிக்க துரிதகதியில் தூர்வாரப்பட்டுவருகிறது. இப்பணியை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சத்யகோபால் ஐ.ஏ.எஸ், மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆகியோர் இன்று (ஜூன் 17) ஆய்வுசெய்தனர்.
பின்னர் சத்யகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிக்காக 67 கோடி ரூபாய், கடலூர் மாவட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் என மொத்தம் 69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3,615 கிலோமீட்டர் தொலைவுக்கான இப்பணிகளில் ஏறத்தாழ 95 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை வந்துசேர்வதற்குள் இன்னும் ஓரிரு நாள்களில் அனைத்துப் பணிகளும் முடிவடையும். இதேபோல், மாநிலம் முழுவதும் 1,387 பணிகள் 499.5 கோடி மதிப்பீட்டில், குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க:புதுச்சேரி காவல் துறையின் புதிய முயற்சி