நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருநின்றியூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை இரண்டாம் செவ்வாய்க் கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவான கடந்த 14ஆம் தேதி கரகம் எடுத்துவந்து பூச்செரிதல், காப்புக் கட்டுதல் ஆகியவற்றோடு விழா தொடங்கியது.
இதைத்தொடர்ந்து 10ஆம் நாள் திருவிழாவில் அய்யாவையனாற்றின் கரையில் இருந்து கரகம், காவடிகள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திருநின்றியூரைச் சுற்றியுள்ள காளிங்கராயோடை, கருவாழக்கரை, மொழையூர், சேமங்கலம், செம்பனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்துவந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.