நாகை மாவட்டத்தில் 95 ஆயிரத்து 354 ஹெக்டேர் பரப்பளவில் சம்பாவும், 37 ஆயிரத்து 50 ஹெக்டேர் பரப்பளவில் தாளடியும் என மொத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், 66 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பளவில் நேரடி விதைப்பு செய்துள்ளனர்.
மேலும், 28 ஆயிரத்து 428 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் முறையில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். தற்போது சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகள் களை எடுத்தல், பூச்சிமருந்து தெளித்தல் உள்ளிட்டப் பணிகளில், மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சில வயல்களில், குலை நோய், ஆணைக் கொம்பன், புகையான் தாக்குதல் உள்ளிட்டவை அதிகரித்து வந்த நிலையில், தற்போது நெற்பயிர்கள் மஞ்சள் நோய் தாக்குதலுக்கும் உள்ளாகத் தொடங்கியிருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக பாலையூர், செல்லூர், பெருங்கடம்பனூர், சிக்கல் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த மஞ்சள் நோய்தான் நாட்கள் செல்லச் செல்ல வயல் முழுவதிலும் பரவி, புகையான் நோயாக மாறும், இதனால் அறுவடைக் காலங்களில் மகசூல் பாதிப்பு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கடன்வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர்கள் இதுபோன்று தாக்குதலுக்கு ஆளாகுவதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், எனவே வேளாண்துறை அலுவலர்கள் உடனடியாக நெற்பயிர்களை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடல் ஆமை பாதுகாப்பு மையம்: ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!