நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரின் குடும்பத்தினருக்கும், பாலையூர் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலிஸாக உள்ள மாதவன், கோவிந்தராஜ் ஆகியோருக்கும் இடையே இடப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த 4ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், ஆய்வாளர் வேலுதேவி விசாரணை செய்யாமல் பிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ்களுக்கு சாதகமாக செயல்பட்டு, முரளியையும் அவரது குடும்பத்தினரையும் அவமானப்படுத்தியுள்ளார். இதில் மனமுடைந்த முரளி கடந்த 5ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டிய காவல் ஆய்வாளர் மீதும், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முரளியின் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் முரளியின் உடலை அவர்கள் வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் முரளி தற்கொலைக்குக் காரணமான ஆய்வாளர் வேலு தேவி மீது கொலை வழக்குப் பதிவு செய்யக்கோரி காவல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பாதுகாப்பு பணியிலிருந்த மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்து கலைந்து சென்றனர்.