மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாதானம் கிராமத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்கில் தலையிட்ட புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாடார் மக்கள் பேரவை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில், மாதானம் செருகுடியைச் சேர்ந்த அன்னபூரணி என்பவரின் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், எதிர் தரப்பினரான ரவிச்சந்திரன் பிரச்னைக்குரிய இடத்தில் டிராக்டரை கொண்டு வயலில் புழுதி அடிப்பதற்கு புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் சந்திரா உடந்தையாக இருந்ததாகவும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து நாடார் மக்கள் பேரவை நிறுவன தலைவர் ராஜா பேசுகையில், ''இந்த பிரச்னை தொடர்பாக அன்னபூரணி மகன் கார்த்திகேயன் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிவில் வழக்கில் ஒருதலைபட்சமாக தலையிட்ட புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் சந்திரா மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வருகின்ற 26ஆம் தேதி புதுப்பட்டினம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இந்த பிரச்னை குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: இ.கம்யூ., தலைவரை அவதூறாகப் பேசியவரை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!