மயிலாடுதுறை: குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனையடுத்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகி விட்டன.
தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்தின என்பது குறிபிடதக்கது. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒருநாள் முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் போராட்டம் நடத்துவது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி கடையடைப்பு செய்து, தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளை மதிக்காமல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் மாவட்டம் முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணித்துள்ளனர்.
மேலும், லாரி உரிமையாளர் சங்கத்தினர் தரப்பில் 500க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டது.
மேலும், இந்த கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை விவசாய சங்கத்தினர் உள்பட இந்திய கூட்டணி சார்பில் மாவட்ட தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!