நாகை: வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்த நிலையில், நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.
அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு
கரோனோ தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இருந்த நிலையில் கரோனோ தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்தது. தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்கள் வாரத்தில் நான்கு நாள்கள் திறக்கப்பட்டும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
வழிபாடுகள் தொடங்கின
இதையடுத்து, தமிழ்நாடு அரசு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க நேற்று அனுமதி அளித்தது.
இதனால், நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா, என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு காலை முதலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். நாகூர் தர்கா இன்று அதிகாலை திறக்கப்பட்டு அங்கு இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினரும் வழிபட்டனர்.
மதநல்லிணக்ததிற்கு நல்ல உதாரணம்
பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் இன்று பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்போடு பிரார்த்தனை செய்யப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. நாகை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பக்தர்கள் பங்குகொண்டனர்.
நாகையில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் வந்து வழிபாட்டு செல்லும் மதநல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாக திகழ்ந்து வருகிறது.
தானியங்கி கிருமிநாசினி கட்டாயம்
முன்னதாக வேளாங்கண்ணி பேராலயத்தில் தானியங்கி கிருமிநாசினி வைக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் கிருமிநாசினி பயன்படுத்தியும் முகக்கவசம் அணிந்து உள்ளே வரவேண்டுமென அவர்களை அறிவுறுத்தினர். வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வரத்து குறைந்ததால் வாழ்வாதாரம் பாதித்திருந்த வியாபாரிகளும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதியளித்த தமிழ்நாடு அரசுக்கு வேளாங்கண்ணி பேராலயம் சார்பிலும் மற்றும் அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தங்கக் குதிரையில் 'கல்கி அவதாரத்தில்' அருள்பாலித்த ஏழுமலையான்