மயிலாடுதுறை: சீர்காழி அருகேயுள்ளது கீழமூவர்கரை மீனவ கிராமம். இங்குள்ள மீனவர்களான கர்ணன், ஜெயக்குமார், மாதவன் உள்ளிட்ட ஆறு குடும்பத்தினரை கீழமூவர்கரை மீனவ கிராமத்தின் தலைவர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார். சினிமா பாணியில் அக்குடும்பத்தினருடன் யாரும் பேசக்கூடாது, மளிகைக் கடை, கோயிலில் எந்த பொருளும் கொடுத்து வாங்கக் கூடாது எனக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சீர்காழி வட்டாட்சியர் சண்முகத்திடம் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் வட்டாட்சியர் சண்முகம், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், கிராம மக்களிடம் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக கிராமத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மண்டை உடைப்பு
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வட்டாட்சியரிடம் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த எதிர் கோஷ்டியினர், ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் கீழமூவர்கரை கிராமத்திற்கு வந்ததும் அவர்களைத் தாக்கி மண்டையை உடைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்த தாக்குதலால் காயம் அடைந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கீழமூவர்கரை கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஊரை காலி செய்துவிட்டு அரசு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து திருவெண்காடு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 500 நெல்மூட்டையுடன் லாரி கடத்தல்; இரண்டாவது மனைவி வீட்டில் திருடன் கைது