நாகப்பட்டினம்: நாணயக்கார தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்க நகைக் கடைகள் உள்ளன. இதில் கதிரவன் என்பவருக்குச் சொந்தமான திவ்யா நகைக் கடைக்குத் திங்கட்கிழமை (நவம்பர் 22) இளைஞர் ஒருவர் சென்று தங்க செயின் கேட்டுள்ளார்.
கடை உரிமையாளர் செயின் மாடலை காட்டிக் கொண்டிருக்கும்போது அந்த இளைஞன் அருகிலிருந்த மோதிரத்தை எடுத்துக் காட்டும்படி கூறியுள்ளார். அப்போது கடை உரிமையாளர் அசந்த நேரத்தில், தங்க செயின் ஒன்றைத் திருடிக்கொண்டு அந்த இளைஞன் கடையிலிருந்து தலைதெறிக்க வீதியில் இறங்கி ஓடினார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் சத்தம் போட்டு இளைஞனைப் பிடிக்க முயன்றுள்ளார். இருப்பினும் அவர் யார் கையிலும் சிக்காமல் தப்பிச்சென்றார்.
இச்சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் கதிரவன், நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அருகிலுள்ள சிசிடிவியை (CCTV Footage) ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இளைஞன் திருடிய 10 பவுன் தங்க சங்கிலியின் மதிப்பு சுமார் நான்கு லட்ச ரூபாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலித்து வீட்டைவிட்டு வெளியேற்றம்: சிறுவர், சிறுமி உயிரிழப்பு